தலையங்கம்: பேராசை பெருநஷ்டம்
First Published : 09 Jul 2010 12:57:00 AM IST
Last Updated :
09 Jul 2010 01:18:57 AM IST
வளர்ச்சி, முன்னேற்றம், வசதியான வாழ்க்கை, விஞ்ஞானம் வழங்கும் நன்மைகள் என்பவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த வளர்ச்சி மனிதன் உள்பட உலகிலுள்ள உயிரினங்களின் ஒட்டுமொத்த அழிவுக்கு வழிகோலுமேயானால், அதனால் என்ன பயன் என்கிற கேள்வி எழுகிறது. விஞ்ஞானம் தந்த கொடை என்று நாம் போற்றிப் புகழ்ந்த, புகழும் பல வசதிகள், ஒட்டுமொத்த உலகின் அழிவுக்கும் இட்டுச் செல்லும் அபாயம் சமீபகாலமாகத் தென்படத் தொடங்கி இருக்கிறது.அணுசக்திக் கழிவுகள், கதிரியக்கக் கசிவுகள் ஆகியவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல், ஒருபுறம். பிளாஸ்டிக் போன்ற பொருள்களால் ஏற்படும் ஆபத்து இன்னொருபுறம். உற்பத்திப் பெருக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்களால் பூமிக்கும், அதில் விளையும் பொருள்களை உட்கொள்ளும் உயிரினங்களுக்கும், ஏற்படும் பாதிப்பு மற்றொருபுறம். சுற்றுச்சூழல் பாதிப்பால் புதுப்புது வியாதிகள், கட்டுப்படுத்த முடியாத விஷக்கிருமிகள் பரவுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்று இவையெல்லாம் மனித இனத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றன.சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம் (இன்டர்நேஷனல் யூனியன் ஆஃப் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்) என்கிற அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்கு லண்டனில் உள்ள கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ்சில் நடத்தப்படும் உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்றும் இந்த ஆண்டுக்குள் வெளியிடப்பட இருக்கிறது.இந்த விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையின்படி உலகில் உள்ள தாவர இனங்களில் நான்கில் ஒரு பகுதிச் செடிகள் விரைவிலேயே அழிந்துவிடும் நிலையில் இருக்கின்றன. நமது விஞ்ஞானிகளும், இயற்கைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்போரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சுதாரித்துக் கொள்வதற்குள், பல அற்புதமான பூக்களால் உலகை வண்ணமயமாக்கும் தாவரங்கள் உயிர் பெருக்க சக்தி இழந்து அழிந்து விடும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன. சுற்றறிக்கையே அதிர்ச்சி அளிக்கிறது என்றால் முழு அறிக்கை எப்படி இருக்கப் போகிறது என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாகவே இருக்கிறது. ஏதோ, தாவரங்களுக்கு மட்டுமே நேரிடும் ஆபத்து என்று கருதிவிட வேண்டாம். பாலூட்டி உயிரினங்களில் ஐந்தில் ஒன்றும், கடல்வாழ் பிராணிகளில் மூன்றில் ஒன்றும், பறவை இனங்களில் எட்டில் ஒன்றும் இருந்த அடையாளமே இல்லாமல் அழியும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.உலகில் ஏறத்தாழ 4,00,000 பூ பூக்கும் தாவரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதில் 3,52,282 தாவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு புகைப்படங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் 35,000 முதல் 70,000 தாவரங்கள் காணப்படலாம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் அவைகளைப் பட்டியலிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்தத் தாவரங்களைக் காப்பாற்றியாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.மனித இனத்தின் பெருக்கமும், வளர்ச்சி என்கிற பெயரில் மனிதன் இயற்கையை அழிக்க முற்பட்டிருப்பதும்தான் ஏனைய மிருகங்கள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. உறைவிட இழப்பு மிருகங்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும், தாவரங்களுக்கும்கூட உயிரிழப்பாக மாறி இருக்கிறது. செல்போன் போன்ற கதிரியக்கப் பொருள்களும், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களும் பறவை இனங்களை வெகுவாகப் பாதித்து, அழிப்பதுபோல, விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும், கடல்வாழ் பிராணிகளுக்கும் வேறு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை இந்த ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.பெட்ரோலியப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புதான் தாவர இனங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகக் கருதப்படுகிறது. பெட்ரோலியத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ரசாயன உரங்கள், ஒருபுறம் அதிக உற்பத்தியை உறுதி செய்தாலும், நிரந்தரமாக விளைநிலத்தைப் பாதிப்பதுடன், பல நச்சுவாயுக்களை உற்பத்தி செய்கின்றன. இதன் தொடர்விளைவாகப் பல தாவர இனங்கள் தங்களது இனப்பெருக்க சக்தியை இழந்து, அழிந்து விடுகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை.பறவைகளும், கடல்வாழ் உயிரினங்களும், தாவரங்களும், ஏனைய பாலூட்டி மிருகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுவடு தெரியாமல் பூமிப்பந்திலிருந்து மறையத் தொடங்கினால், காலப்போக்கில் மனிதனின் நிலைமைதான் என்ன? மரம், செடி, கொடிகள் இல்லாத, வேறு எந்தவித உயிரினங்களும் வாழாத ஓர் உலகம் ஏற்படுமேயானால் அதில் மனிதன் மட்டுமே வாழ்வது என்பதுதான் எங்ஙனம்? பல்லுயிர் பெருக்கம் இல்லாமல் உலகம் உயிர் வாழ முடியுமா, என்ன?அப்படி ஒரு நிலைமை ஏற்பட பல நூறு நூற்றாண்டுகள் ஆகலாம் என்கிற நிலைமை இருந்தால்கூடப் பரவாயில்லை. ஒரு சில நூற்றாண்டுகளிலேயே அந்த நிலைமை ஏற்பட்டுவிடும் அபாயத்தை நமது "துரித' கலாசாரமும், அவசரமும் ஏற்படுத்திவிடும் போலிருக்கிறதே? அணுசக்திக் கழிவும், கதிரியக்கப் பாதிப்பும், பெட்ரோலியப் பொருள்களால் ஏற்படும் கரியமில வாயுவும் மனித இனத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகத்தின் வருங்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றி இருக்கிறதே, இதற்கு நாம் என்னதான் செய்யப் போகிறோம்? இதை எப்படி நேரிடப் போகிறோம்?பச்சையம் (க்ளோரோஃபில்) - இதில்தான் உலகின் உயிர்ப்பே அடங்கி இருக்கிறது. அதற்கு ஏற்படும் ஆபத்து, நமக்கு ஏற்படும் ஆபத்து என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படாவிட்டால், இந்த பூமிப்பந்தை அந்த ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாமல் போய்விடும்!